தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒகேனக்கல் காவிரி ஆறும் ஒன்றாக உள்ளது. இங்கு கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து, காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தும், பரிசல் பயணம் செய்தல், ஆயுள் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும், மீன் சாப்பாடு உண்டும் மகிழ்ந்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால், சுற்றுலா தளங்களை திறக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தடையை நீக்கவில்லை. மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க மூன்று இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து காவல் துறையினர் திருப்பி அனுப்பி விடுகின்றனர். மேலும் ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயில் அடைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மாலை நேரங்களில் காவல் துறையினர் இல்லாத நேரங்களில் சுற்றுலா பயணிகள் உள்ள நுழைகின்றன. மேலும் இருள் தொடங்கும் போது, மடம் சோதனை சாவடி அருகிலேயே வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு, காடு மற்றும் வயல் வழியாக சோதனை சாவடியை கடந்து விட்டு, வனப் பகுதிக்கு சென்று, ஷேர் ஆட்டோ மூலம் ஒகேனக்கல் செல்கின்றனர். இதனால் பகலில் வெறிச்சோடி கிடக்கும், ஒகேனக்கல் சுற்றுலா தளம், இரவில் கூட்டம் அதிகமாகிறது. பெரும்பாலானோர் இரவு நேரத்தில் ஆயுள் மசாஜ் செய்து, அருவியில் மது அருந்துகின்றனர். இதனால் இரவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் வரும் அனைவரும் மது அருந்திவிட்டு வருகின்றனர். ஆனால் கட்டுப்பாடு இல்லாமல், ஆற்று பகுதியில் இறங்கி சிலர் மது பாதையில் ஆபத்தை அறியாமல், புகைப்படம் எடுக்கின்றனர்.
தொடர்ந்து சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும், ஆற்றில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே இரவு நேரங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.