சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடன், இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல கனமழை பெய்தால் இந்த பகுதி மீண்டும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை கனமழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்பதை அன்றாடம் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாததால் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வோம் வாகன ஓட்டிகள் எந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஏற்காடு முளைப்பாதையை பொதுப்பணி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்காடு மலைப்பாதையில் உள்ள ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலா பயணி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வரும் வாரத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வர வாய்ப்புள்ளதால் ஏற்காடு மலை பாதையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள சாலையை நிறைந்து சீர்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மழை காரணமாக இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் 282.4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக காடையாம்பட்டி 53 மி.மீ மழை பெய்தது. ஏற்காட்டில் 46.2 மி.மீ மழை பதிவானது. மேட்டூர் 40,2 மி.மீ மழையும், சங்ககிரி 38.2 மி.மீ, தம்மம்பட்டி 32 மி.மீ, காரிய கோவில் - 15 மி.மீ, ஓமலூர் 13 மி.மீ, கெங்கவல்லி 12 மி.மீ, வீரகனூர்  8 மி.மீ, எடப்பாடி 7.6 மி.மீ, ஆத்தூர் 5 மி.மீ, சேலம் 1.7 மி.மீ, என மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 250.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.