தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விளைச்சல் அதிகரித்து வந்தது ஆனாலும் வெளியூர் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால், உள்ளூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளி குறைவாகவே இருந்தது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கிலோ 20 முதல் 25 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 500 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் மற்றும் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் மார்கெட்டில் விற்பனைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ 6 முதல் 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து விவசாயிகளிடையே நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ 3, 4 ரூபாய் என அடிமட்ட விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் விலை குறைவாக இருப்பதால், அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என்பதால், ஒரு சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், விவசாய நிலங்களில் விட்டு, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்காததால், தக்காளியை விற்பனை செய்யாமல், சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளின் சந்தோசம் நீடிக்காமல், உடனே விலை கடுமையாக சரிந்ததால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தக்காளி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.