தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகடூர் புத்தகப் பேரவை சார்பில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் தகடூர் புத்தக பேரவை சார்பில், புத்தக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழா இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கி, அரங்குகளில் வைத்துள்ள புத்தகங்களை பார்வையிட்டார். 

 


 

கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தக கண்காட்சியை பார்வையிட புத்தக வாசிப்பாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு புத்தகத் திருவிழா எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் விடுதலை போராட்ட வீரர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள்,  அறிவியல், வரலாற்று நூல்கள், சிறுகதைகள், நாவல், பொது அறிவு, போட்டித் தேர்வைக்கான புத்தகம், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் பயிற்சி நூல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் 10 அரங்குகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு நாட்களில் தினம் ஒரு தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். இந்த புத்தக கண்காட்சியை காண ஏராளமானோர் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

 



 

பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் குறைதீர் முகாம் - 14,503 மனுக்கள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 

 



 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக விவசாய மற்றும் உலவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 20,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதனை தமிழக விவசாய மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விரைந்து மனுக்களை பரிசீலனை செய்து நலத் திட்டங்களை வழங்குவதற்கான ஆவண செய்யுமாறு உத்தரவிட்டார்.

 



 

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர் பாலக்கோடு ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் இடையே கோரிக்கை மனுக்களை பெற சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து இன்று ஒரே நாளில் 14,503 மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளின் இடம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி ஒப்படைத்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் மொத்தம் 34,390 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியுள்ள பயன்களை தேர்வு செய்த பின், வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி தமிழக முதல்வரால் நலத்திட்ட உதவிகளை வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன், சார் ஆட்சியர் சித்ரா விஜியன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.