சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் அருகில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் உலகில் மிக உயரமான முருகன் சிலை கொண்ட முத்து மலை முருகன் கோவிலில் சிலை வடிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது. தற்போது சேலத்தில் கட்டப்பட்டு வரும் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 



உலகின் உயரமான முருகன் சிலையை காண்பதற்கான கோவில் திறப்பதற்கு முன்பே கட்டுமான பணிகளை பார்வையிட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகனை தரிசிக்க முத்து மலை முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இதற்கான கும்பாபிஷேகம் வரும் 06.04.2022 அன்று நடைபெற உள்ளது. இக்கோவிலில் முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண்கள் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது துவக்கப்பட்டது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதியின் குழுவினர் தற்போது இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதுகுறித்து கோவிலின் உரிமையாளர் ஸ்ரீதர் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முருகனுக்காக மிக உயர்ந்த கோவிலை கட்ட வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமாக இருந்தது. அப்போது கட்டத் துவங்கிய இக்கோவில் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. நாங்கள் இந்த கோவிலை கட்ட விரும்பியதை விட முருகன் ஆசைப்பட்டதால் தான் இது சாத்தியமானது என்று கூறினார். இக்கோவிலின் சிறப்பம்சமாக பக்தர்கள் நேரடியாக வேலின் மீது நேரடியாக பால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை அன்று உத்தம யாக சாலை என்று சொல்லப்படும். 90 சிவாச்சாரிகளை கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக கூறினார்.



மேலும் கும்பாபிஷேகதின் அன்று ஹெலிகாப்டரின் மூலம் முருகன் மீது மலர்கள் தூவ மற்றும் பால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிப்பதற்கும், பக்தர்கள் ஹெலிகாப்டரில் பயணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உலகின் மிக உயரமான முருகன் சிலை இந்தியாவில் கட்டப்பட்டுள்ளதால் அதன் கும்பாபிஷேகத்திற்கு பிரதமரை அழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். லட்சக்கணக்கான பக்தர்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 06.04.2022 தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.