ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி , வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
அப்போது கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது, நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். அப்போது அவர்களை காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர். இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது, இதனையடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் குளிப்பது செல்பி எடுப்பது புகைப்படங்கள் எடுப்பது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 430 நீர்நிலைகளில் 33 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், மலைகள் சூழ்ந்த பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கு மண் சரிவு ஏற்படுவது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.