தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி ஈபி காலனியை சேர்ந்த சந்திரன் மகன் சங்கர், படிக்கும் பருவத்தில் இருந்தே நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். சங்கர் தனது விருப்பப்படியே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பயிற்சி முடிந்து, பல்வேறு மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

 

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். சங்கருக்கு திருமணமாகி மனைவி கலா, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றி வரும் முகாமில், காலை உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் முகாமிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாரண்டஹள்ளியில் உள்ள சங்கரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 



 

இதனை அடுத்து ஜார்க்கண்டில் மாரடைப்பால் உயிரிழந்த சங்கரின் உடல், விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான மாரண்டஹள்ளிக்கு  கொண்டு வரப்பட்டது. ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சங்கரின் உடலை கண்டு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமே கதறி அழுதது.

 

இதனை சங்கரின் உடல்  பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி உயிரிழந்த சங்கரின் உடலுக்கு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மாரண்டஹள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உயிரிழந்த சங்கரின் மனைவி மற்றும்  குழந்தைகளுக்கும் அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.



 

இதனையடுத்து சங்கரின் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களது குல வழக்கப்படி, சொந்த ஊரில் உள்ள மயானத்தில்  ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் பணியின்போது உயிரிழந்த சங்கரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆதரவில்லாத நிலை இருப்பதால், தமிழக அரசு உயிரிழந்த சங்கரின் மனைவிக்கு, அரசு பணி வழங்க வேண்டும் என குடும்பத்தினரும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சங்கரின் இறப்பு கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.