தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க ஆதரவு கோரி சேலம் நெடுஞ்சாலை நகரில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, தமிழகத்தில் 20 ஆண்டுகளை கடந்து ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமியின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான மனுவை அதிமுக பொதுச்செயலாளர் இடம் கொடுத்துள்ளதாக கூறினார். இதற்கு முன்பாக தமிழக முதல்வரிடம் அண்ணா பிறந்தநாளின் போது விடுதலையை உறுதிப்படுத்துங்கள் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதுகுறித்து தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டு வருவதாக கூறினார். இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை, இந்த நிலையில் வருகின்ற 9 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு தமிழக அரசு எந்தவித நடைமுறையை பின்பற்றியதோ? அத்தகையே நடைமுறையை இவர்கள் விஷயத்திலும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களை வைத்துள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து வருவதாகவும், இதன் தொடர்ச்சியாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக கூறினார். இதற்கு சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, எந்தவிதத்தில் சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வரமுடியும் என்பது குறித்து ஆலோசனை பெறுவதாக கூறினார். அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழகத்திற்கு நல்லசெய்தி. துணிச்சலாக இந்த முடிவு எடுத்ததற்கு தமிழக மக்களின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துள்ளோம். இந்த சந்திப்பு முழுக்க, முழுக்க ஆயுள் சிறைவாசிகளை வெளியே கொண்டு வருவது குறித்த சந்திப்பு மட்டும்தான் என்றார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வேறு அரசியல் குறித்து இதுவரை பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. அப்பொழுது இதுகுறித்து பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறினார்.



மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சரை இரண்டு முறை சந்தித்து பேசுவதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரையின்போது ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்வதாக கூறியிருந்த அந்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தான் கேட்டதாக தெரிவித்தார். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கடிதம் அனுப்பியும் கூட, தமிழக முதல்வர் சந்திக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தது. கொள்கை ரீதியாக தமிழகத்தின் நலன், சமூகநீதி உள்ளிட்டவைகள் ஒத்து வராது என்பதால் தான் திமுகவிற்கு ஆதரவளித்திருந்தோம், அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தொகுதி கேட்டும், திமுக சீட்டு வழங்கவில்லை. எனவே தேர்தலுக்குப் பிறகு கேட்பதற்கு ஒன்றுமில்லை. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதுபோன்று தமிழகத்திலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு தமிழக அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முயற்சியை மனதாரப்பாராட்டுகிறோம். இந்தியாவிற்கே ரோல் மாடலாக விலகிக் கொண்டிருக்கிறார். எனவே காட்டிலுள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கிறார்கள், ஆனால் உயிருள்ள மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை சதவீதம் உள்ளார்கள் என்று கணக்கெடுப்பில் என்ன தயக்கம் எனவும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கணக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு சமூகத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு கிடைக்கும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள ஜாதி சமூக தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் பேசினார்.