தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுமார் 50 நகர மற்றும் புறநகர் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில்  வழித்தடம் எண் 6, நகரப் பேருந்து பாலக்கோடு முதல் எலங்காளப்பட்டி,  அரசு மகளிர் கல்லூரி, கெரகோடஹள்ளி வழியாக காரிமங்கலம் செல்கிறது. இந்த நகர பேருந்து காலை, மாலை என இருவேளைகளிலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

 



 

இந்த வழித்தடத்தில் செல்லும் நகர பேருந்து எண்-6 அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை பேருந்தில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் கீழே இறங்கி தள்ளி எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேருந்து திடீரென நின்றுவிட்டது. இதனையடுத்து பேருந்து நடத்துனர், பொதுமக்கள் பேருந்தை தள்ளி சென்றனர்.

 

காரிமங்கலம் நகர பகுதியில் சாலையின் நடுவே நின்ற பேருந்தை சகபயணிகள் தள்ளும் காட்சி சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பேருந்து, ஆ தள்ளு தள்ளு தள்ளு என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப அடிக்கடி பாதியில் நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தை நிறுத்திவிட்டு, மாற்று பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.