சேலம் மாநகரகாவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் அவரது தொலைபேசி எண்ணில் உள்ள வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் "பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை" என்ற தலைப்புடன் வாசகங்கள் இடம் பெற்றது. இதில் "சேலம் மாநகரத்தில் திருமதி லாவண்யா என்பவர் காவல்துணையாளராக இருக்கிறார். இவர் சேலம் மாவட்ட காவல்கண்காணிப்பாளராக பதவி பெறவேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டிஜிபி இடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார்" என அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். ஸ்டேட்டஸ் வைக்கப்பட்ட மூன்று நிமிடங்களில் அந்த ஸ்டேட்டஸ் ஆனது அகற்றப்பட்டது. 



இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, நேற்று மதியம் 2 மணி அளவில் எனது வாட்ஸ் அப்பில் உள்ள பல குழுக்களில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து செய்தி ஒன்று பரவி வந்தது. இதனை சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா இருவருக்கும் பகிர்ந்தேன். பின்னர் அடுத்த மூன்று நிமிடங்களில் எனது நண்பர் ஒருவர் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா குறித்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக தெரிவித்தார். உடனடியாக அதனை அகற்றிவிட்டேன். அது தவறுதலாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வந்துவிட்டது. இது என்னை அறியாமல் நடந்த தவறு. இதற்கு நான் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பது மிகவும் தவறு. இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமார் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யாவிற்கும் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து வருத்தம் தெரிவித்தேன் என்று கூறினார்.