சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, நூறு ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தினை முதற்கட்டமாக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டுவிட்டது.
திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துவிட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்கள் பற்றி கவலையில்லை, வீட்டு மக்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம், விலை உயர்ந்த பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு சென்று குறைவான விலைக்கு ஏற்றுமதி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம்.
தமிழகத்தில் எல்லாம் விலையும் உயர்ந்துவிட்டது. குறிப்பாக செருப்பு, சோப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. வருமானத்தை விட விலைவாசி உயர்ந்துவிட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து எடுத்து கூறினால் கேட்க மறுக்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்ததால், எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவையும் செய்யலாம் என்று செய்து வருகின்றனர்.
மக்கள் பற்றி கவலையில்லை விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கவலையில்லை. ஊழல் செய்து அதிக பணம் கொடுத்தது அமைச்சர் செந்தில் பாலாஜிதான். தற்போது கொடுத்துவிட்டு மாட்டிக்கொண்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் அதிகநாள் அமைச்சராக இருந்தது துரைமுருகன்தான், தற்போது திமுகவிற்கு பொதுச்செயலாளராக உள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது அனைவரும் நேரில் சென்று பார்க்கவில்லை ஒருசிலர் மட்டுமே பார்த்தார்கள். ஆனால் செந்தில் பாலாஜி, ஐந்து கட்சிகளுக்கு சென்று கடைசியில் வந்து திமுகவில் சேர்ந்தார். அதிகமாக பணம் கொடுத்ததால் ஸ்டாலின் பதறிப்போய் ஓடோடி சென்று பார்க்கிறார். துரைமுருகன் போன்று கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை.
ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்த போது, அனைத்து அமைச்சர்களும் சென்று பார்த்து வருகிறார்கள் என்றால் ஊழல்தான் காரணம் என்று விமர்சனம் செய்தார். ஊழல் செய்து அதிகமான நிதியை கொடுத்தவர் செந்தில் பாலாஜி தான்... அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்து பேசிவிட்டால் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் இடமே வேறு. அதனால் பயந்து பதறிப்போய் பார்த்து வருகிறார். திமுகவிற்காக 65 ஆண்டுகள் பாடுபட்ட மூத்த அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
செந்தில் பாலாஜி எவ்வளவு கொள்ளையடித்தார் என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ஊழல் மலிந்த அரசாங்கம், திமுக அரசாங்கம் என்பது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுகதான், இதற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. பெண்கள் தனியாக சுதந்திரமாக செல்ல முடியவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினசரி நடந்து வருகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியும் திமுக அரசாங்கம் அது பற்றி கவலைப்படவில்லை. கஞ்சா விற்பனை குறித்து எத்தனை முறை எடுத்துக் கூறியும் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று எதையும்பற்றி கவலைப்படாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தியது தான் திமுகவின் இரண்டு ஆண்டு கால சாதனைகள். திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசினார்.