சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி மலைக் கோட்டையில் அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மதிவேந்தன் மற்றும் சக்கரபாணி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி மற்றும் திமுக மற்றும் அதிமுகவினர் அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.



தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். 


அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், உள்ள அவரது நினைவு சின்னத்திற்கும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 



இவர்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அதிமுகவினர் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இவர்களைத் தொடர்ந்து பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை 11 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார்
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் அவர் கூறியதாவது....



சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கும் குணாளன் நாடார்க்கும் பொன்னானுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக இன்று பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சட்டசபையில் மூத்த தலைவர்களின் படம் வைப்பது வழக்கமான விஷயம்தான் கலைஞர் படத்தை வைத்ததை  அரசியல் காரணங்களையும் தாண்டி கலைஞர் தமிழ் பற்றாளர் என்பதால் பாஜக வரவேற்கிறது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்
தயாநிதிமாறன் அரசியல் நாகரீகம் அறிந்து பேசவேண்டும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து அவர் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் இதுபோன்று அவதூறான அநாகரிகமான வார்த்தைகளை பேசத் தேவையில்லை அவர்களுக்கும் கர்நாடகாவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் உள்ளது என்றும், மேகதாது அணை கட்டுவதற்கு கண்டிப்பாக பிரதமர்  மோடி சம்மதிக்க மாட்டார் 1956 சட்டப்படி மேகதாதுவில் அணை கட்ட சட்டப்படி சாத்தியமில்லை என்பதால் கண்டிப்பாக மேகதாது அணையை அந்த பகுதிகள் கட்டுவதற்கு மோடி சம்மதிக்க மாட்டார் என அண்ணாமலை தெரிவித்தார்


ஆகஸ்ட் 5-ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசியல் தலைவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூரில் பாஜக சார்பில் அனைத்து தலைவர்களும் பங்குபெறும் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் அறவழிபோராட்டத்திற்கு கண்டிப்பாக செவி சாய்ப்பார் கள் என நம்புவதாக  அண்ணாமலை பேட்டியின் போது தெரிவித்தார்.


தொடர்ந்து இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் நிபந்தனைகளுடன் பல்வேறு கொங்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மரியாதை செலுத்த நேரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சங்ககிரி நகர பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 


தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி மலைக் கோட்டை மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட சங்ககிரி நகர பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சங்ககிரியில் குறிப்பிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.