தீபாவளி பண்டிகைக்கு இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்கவும் என நோட்டீஸ் விநியோகித்த இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி. இவர் கடந்த சில தினங்களாக துண்டு பிரசுரம் ஒன்றை வியாபாரிகள், பொதுமக்களிடம் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதில், நலிவுற்ற நிலையிலிருக்கும் இந்து வியாபாரிகளை காப்பாற்ற, வரும் தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்குங்கள் என அந்த நோட்டீசில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் விநியோகம் செய்தது மட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர். சக்தியை கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தில் கூடினர்.
அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு நின்றிருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெற்றி என்பவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்