சேலம் - சென்னை இடையே விரைவுச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் பணிகளைத் தொடங்கிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அதற்கான ஆலோசனை கூட்டத்தை இன்று சென்னையில் நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சென்னை மண்டல அதிகாரி சோமசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும். விரைவில் சேலம் - சென்னை இடையே பயண நேரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க புதிய விரைவுச்சாலை திட்டத்திற்கான பணிகள் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சேலம் - சென்னை இடையே மூன்று சாலைகள் உள்ளதால், புதிய விரைவு சாலை அமைப்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சேலம் - சென்னை இடையே 8 வழிச் சாலை என்று தொடங்கப்பட்ட திட்டம் ரத்தான நிலையில், தற்போது அதே வடிவமைப்பை கொண்ட விரைவுச்சாலைக்கு மக்களின் நிலங்கள் கையகப்படுத்துவது குறித்து விரைவில் புதிய அறிவிப்பினை தேசிய நெடுஞ்சாலைத்துறை தயார் செய்ய உள்ளது. எட்டு வழிச் சாலைக்கு சேலம் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்களது விவசாய நிலத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரைவுச்சாலை விவசாய நிலத்திற்கு எந்த வித பாதிப்பும் இன்றி வடிவமைக்கப்பட்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் தெரிவித்திருந்தனர். எனவே புதிய சேலம் - சென்னை விரைவு சாலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
இருப்பினும் தமிழக அரசு சேலம் - சென்னை புதிய விரைவு சாலைக்கு அனுமதி அளிக்காது என்று ஒரு தரப்பினரும், தமிழகத்தில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். அதன்பின் மத்திய அரசருக்கு சமீபத்தில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலை சார்பில் அமைக்கப்படும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியிருந்தார். அதன்பின் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை எட்டு வழி சாலையை பெயர் மாற்றம் செய்து புதிய சேலம் - சென்னை விரைவுச்சாலை என்று பெயர் வைத்து இத் திட்டத்தினை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.