சேலம் மாநகராட்சி சூரமங்கலம் முல்லை நகர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டப மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை (08.05.2022) மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முல்லை நகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில் முன்பிருந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் கேரள செண்டை மேளத்துடன் தய்யம் ஊர்வலம் நடைபெறும். பாரம்பரிய சிலம்பக் கலையை போற்றிடும் வகையில், 50 மாணவர்கள் சிலம்பம் ஆடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், பசு மற்றும் குதிரையுடன் முளைப்பாரி ஊர்வலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. ஊர்வலம் முல்லைநகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் நிறைவடையும்.


 


2 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் மூன்று கால யாக பூஜைகள் பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 7 மணிக்கு மால்குடி சுபா அவர்களின் பாபாவின் கானமழை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 9 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பரிவார கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு வீரமணிராஜூ அவர்களின் இன்னிசை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு இசைப்பள்ளி மாணவியரின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு ஷீரடியில் நடைபெறுவது போல சாவடி ஊர்வலம் நடைபெறுகிறது. புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


 


வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இரண்டு இடங்களில் தொடர்ச்சியாக அன்னதானம் நடைபெற உள்ளது. மூன்று வேளைகளில் உணவும், மற்ற நேரங்களில் பிரசாதமும் அன்னதானப் பந்தலில் பக்தர்களுக்கு வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும், சாய்பாபா லேமினேட்டட் புகைப்படம், உதி, பால்கோவா, இனிப்பு, ஷீரடியில் வழங்கப்படும் ரேவடி பிரசாதம் கொண்ட பை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பக்தர்களுக்கு இந்த பிரசாத பை வழங்கப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவினையொட்டி, சாய்பாபா கோவிலில் வெள்ளிக்கிழமை முழுக்க மலர்களால் அலங்காரமும், சனிக்கிழமை இலைகளால் அலங்காரமும், ஞாயிற்றுக்கிழமை பழங்களால் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவினையொட்டி ரத்த தான முகாம், தடுப்பூசி முகாம், முதலுதவி முகாம் மற்றும் தேவையான இடங்களில் நீர் மோர் பந்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பக்தர்கள் பங்கேற்று சாய் அருள் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.