பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக பள்ளி மேலாண்மை குழுவை மறு சீரமைப்பு செய்திட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இரண்டு ஆண்டுகள் மட்டுமே முழுமையாக செயல்படுத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் சரியான முறையில் செயல்பட வில்லை. எனவே, இந்த திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு "நம் பள்ளி நம் பெருமை" என்று அரசு பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நேற்று (20.03.2022) நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 1749 அரசு பள்ளிகளில் விடுமுறை தினமான இன்று பெற்றோர் வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் கேட்கப்பட்டது. சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோரணங்கள் அமைத்து பெற்றோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு பேச்சாளர்கள் மூலமாக பள்ளி மேலாண்மை குழு மற்றும் இதன்பின் நடத்தப்படும் அரசு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்தும், முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் அந்தந்த பள்ளியின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி வழங்கிட வேண்டும் கல்வி மட்டுமன்றி விளையாட்டு கலை ஆகியவற்றில் அரசு பள்ளி மாணவ மாணவியரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான ஆலோசனைகளை பெற்றோர் மிகுந்த உற்சாகத்தோடு வழங்கினர். இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டத்திற்கு பெற்றோர் வரவில்லை என்ற நிலை ஏற்பட்டது.
இனிவரும் நாட்களில் பெற்றோர் அனைவரும் தவறாமல் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென சக பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான குழுத் தலைவராக அந்தந்த பள்ளியைச் சார்ந்த மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். துணைத் தலைவராக அப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களின் மனநிலை குறித்து பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் இடையே "நம் பள்ளி நம் பெருமை" திட்டம் பாலமாக இருந்து செயல்படும். மாணவர்களின் மேம்பாடு, பெற்றோர்களின் கோரிக்கைகள், பள்ளி மேம்பாடு குறித்தும், மாணவர்களின் நலன், படிப்பு மற்றும் தேவைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.