மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தனியார் துணிக்கடையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் பணி ஆணை வழங்கியதற்கு மாற்றுத்திறனாளி அமைச்சரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.


சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 731 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். மேலும், 54 தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் 124 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். 



இந்த நிலையில் விழா மேடையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் தான் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி தற்போது வேலையில்லாமல் குடும்பம் நடத்தி வருவதாகவும் வாழ்வாதாரத்தை காக்க தனக்கு ஏதாவது வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக அமைச்சர் தனியார் துணிக்கடை ஒன்றில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை உறுதி செய்து அதற்கான ஆணையை அவரிடம் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி முத்து அமைச்சரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். 


முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர்,  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் 37,192 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.42 கோடி பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சுயவேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், வங்கிக்கடன் மானியமாக ரூ.25,000 வழங்கும் திட்டமும், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ. மாணவிகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு உறுதி செய்யப்படுகிறது என்றார்.



இதுகுறித்து மாற்றுத்திறனாளி முத்துக் கூறுகையில், பிறவியிலிருந்து மாற்றுத்திறனாளியான நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். சிறிது காலம் கூலி வேலை செய்து வந்தேன். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூலிக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தேன். மிகவும் சிரமமாக இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தேன். உடனடியாக தனியார் ஜவுளி கடையின் உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து, எனது வேலைக்கு உடனடியாக உதவி செய்தார். மேலும் இதனால் 20 ஆயிரம் ரூபாயில் சம்பளத்தில் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் இதற்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.