சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். சூழல் ஆர்வலரான இவர் கட்டுமான பொறியியல் பட்டதாரி. இவர் கட்டுமான பொறியாளராகவும் சுயதொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கதிர்ராஜ் என்பவருக்கு வீடு கட்டி கொடுப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கதிர்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சுரேந்திரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் பிணையில் வந்துள்ள சுரேந்திரன், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுரேந்திரன், புகார்தாரரின் கையொப்பமே இல்லாத ஒரு மனுவை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட காவல்துறையினர் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் ஒன்றரை கோடி ரூபாய் நான் முறைகேடு செய்துள்ளதாக பத்திரிகைகளுக்கு காவல்துறையினர் தவறான தகவலை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல்துறையினர் இதுபோன்று பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக கூறிய அவர், தனது வழக்கில் இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தான் தலைமறைவாக உள்ளதாக பொய்யான தகவலை பரப்பி விட்டதாகவும் இதன் மூலம் தனது நற்பெயருக்கும் தனது நிறுவனத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தனது பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அதனை காவல்துறையினர் மறைத்து நீதிமன்றத்திற்கு பொய்யான தகவலை கொடுத்து தன்னை கைது செய்வதற்காக உத்தரவு பெற்றுள்ளதாக கூறிய அவர், தனது வழக்கில் காவல்துறையினர் அடுக்கடுக்கான விதிமுறை மீரல்களை கையாண்டு உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் சேகரித்துள்ளதாக கூறினார். அவ்வாறு பொய் புகார் பதிவு செய்த காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இதுபோன்று ஏராளமான பொய் வழக்குகள் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் சிறையில் உள்ளதாகவும், இனி மேலும் காவல்துறையினரின் மிரட்டல்களை எதிர்கொள்ள சட்டரீதியாக உள்ள வழிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஆய்வு கட்டுரை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு, தான் அலைகழிக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தனது வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு லஞ்சம் வாங்கிய 5 துறைகளை சேர்ந்த 12 அதிகாரிகளின் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டேன். அதற்காக தற்போது தன் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.