பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி - சேலத்தில் அதிர்ச்சி

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து சமையல் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவு.

Continues below advertisement

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கான மாணவ, மாணவிகள் விடுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். குறிப்பாக உணவு சமைக்கும் கூடம் கல்லூரிக்குள்ளே அமைந்துள்ளது. இங்கிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மாணவ, மாணவிகள், இருவர் விடுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் இரவு உணவு தயாரித்து மாணவ, மாணவிகள் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள் விடுதியில் வழங்கிய உணவில் பல்லி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் உணவில் பல்லியிருக்கும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவைகளை வெளியிட்டனர். 

Continues below advertisement

இது தொடர்பாக தகவலறிந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் இன்றைய தினம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்கள், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் உணவு சமைக்கும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்தது உறுதி செய்யப்பட்டது. கல்லூரி விடுதியில் உணவு தயாரிக்கும் சமையல் கூடம் திறந்தவெளியில் இருப்பதால் தற்காலிகமாக மூட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேற்கொண்டு சமையல் கூடத்தில் முறையான வசதிகள் ஏற்படுத்திய பிறகு சமையல் கூடத்தை திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலத்தில் பல்லியை சேர்த்து சமைத்த உணவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement