தமிழகத்தில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் விவசாயத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு தற்போதுதான் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவான ராஜேந்திரன் முதல் முறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் என அழைக்கப்படும் இவர், 1980ல் திமுகவின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். பிறகு 1985 முதல் 1992 வரை சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். தொடர்ந்து 1992 முதல் 1999 வரை சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும், 1999 முதல் 2015 வரை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அப்போது இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலினுடன் தீவிர களப்பணியாற்றி அவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  


Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்


மேலும் 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக பனைமரத்துப்பட்டி பகுதியில் எம்எல்ஏவாக தேர்வாகி ராஜேந்திரன் சட்டசபைக்கு சென்றார். பின்னர் 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்த தேர்தல்களில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.  


2021ல் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது சேலம் மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்த ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்தபோது ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜேந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.   


இதைத்தொடர்ந்து அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் வந்த அமைச்சர் ராஜேந்திரனுக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலையம் முன்பு மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை என அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



இதைத் தொடர்ந்து ஏற்காடு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் படகு இல்லம், ஏற்காடு ஏரி, ஏற்காடு பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன், முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் வகையில் நிர்வாகத்தையும் தந்து கொண்டுள்ளார்கள். அதேபோல் சுற்றுலா துறையிலும் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். தமிழ்நாடு பெரும் சுற்றுலா என்ற திட்டத்தில் 300 சுற்றுலா தலங்களை சர்வதேச அளவிலான வசதிகளை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் ஏற்காட்டில் பல பகுதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று படகு இல்லத்தில் மிதவை உணவகம் உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது என்றார்.