சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி பகுதியில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு ஒரு கும்பல் அனுப்பி வைத்து கருகலைப்பில் ஈடுபடுவதாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர், சித்தூருக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கர்ப்பிணிகளுக்கு பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே, சட்ட விரோத பாலனித்தை கண்டறிந்து தெரிவித்த 2 பேரை பிடித்து சித்தூர் போலீசில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் ஒப்படைத்தனர். விசாரணையில், கர்ப்பிணிகளை கண்டறிவதில் பிரோக்கர்கள் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, புரோக்கர் கும்பலை பிடிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் செயல்படும் ஸ்கேன் சென்டர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி கிராம பகுதிகளில் செயல்படும் ஸ்கேன் சென்டர்களையும் கண்டுபிடிக்கும் வகையில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஸ்கேன் சென்டர்களுக்கு உடந்தையாக உள்ளவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் 2000க்கும் மேற்பட்ட தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், முறையாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மிஷினுக்கும் தனித்தனியாக பதிவேடு இருக்க வேண்டும். சட்டத்துக்குட்பட்டு பணி மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறையினர் அனைத்து ஸ்கேன் சென்டரிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் விதிமுறைகளை மீறினால் ஸ்கேன் சென்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். சட்ட விரோதமாக பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு. குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோத பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பில் ஈடுபடும் கும்பலை பிடிக்க கிராம பகுதியில் திவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.