சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்றைய தினம் பரபரப்பும், கடும் வாக்குவாதமும் நிறைந்து காணப்பட்டது. திமுக கவுன்சிலர் கலையமுதன் பேசியபோது, அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவில்லை என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து சத்தம் எழுப்பினர். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் தான், தங்கு தடையின்றி சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்று பதிலுக்கு அதிமுக கவுன்சிலர்கள் பேசினர். இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தவறான தகவல்களை பேசுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்களின் பிரச்சனையை பற்றி பேசாமல் செல்பி எடுப்பது, போன் பேசுவது, ஆன்லைனில் பட்டுப்புடவை ஆர்டர் செய்தது போன்ற காரியங்களில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



சேலம் மாநகராட்சியின் 38 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், அம்மாபேட்டை மண்டல குழு தலைவருமான தனசேகரன், திமுக கவுன்சிலர் கலையமுதன் மக்கள் பிரச்சனை குறித்தும், சேலம் மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை குறித்தும் பேசியபோது தனசேகரன் தனது செல்போனில் பேஸ்புக்கில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.



அதேபோன்று 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தமூர்த்தி, மாமன்ற கூட்டத்தில் மேயர் இருக்கைக்கு எதிரில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு அரங்கத்தின் உள்ளிருந்த மற்றொரு மாமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் அழைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.



மாநகராட்சியின் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.பழனிசாமி மற்றும் 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.எல்.பழனிசாமி இருவரும், சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தனது வார்டில் உள்ள கோரிக்கையை தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது 50 வது வார்டு உறுப்பினர் மற்றும் 51 வது வார்டு உறுப்பினர் இருவரும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.



இவர்கள் அனைவருக்கும் ஒரு படி மேல் சென்று 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகாசினி மற்றும் 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகனப்பிரியா இரண்டு பெண் கவுன்சிலர்களும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சில் பட்டுப் புடவை whatsapp மூலம் ஆர்டர் செய்வது குறித்து மிகத் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர். 


இதுபோன்று மக்களும் பிரச்சனையை பேசக்கூடிய இடத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் அலட்சியப் போக்குடன் செயல்படுவது வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று ஓராண்டற்கு மேலாகியுள்ள நிலையில் இதுவரை பல மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது கன்னி பேச்சினை கூட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.