சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். நேற்று தொடங்கி 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 



தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களின் விவரங்களை பட்டியலிட்டு பேசிய அவர், திமுக அரசு சேலம் மாவட்டத்தில் ஒரு நலத்திட்டங்களை கூட செயல்படுத்தவில்லை என முன்னாள் ஆட்சியாளர்கள் உண்மைக்கு புறம்பாக குறை கூறி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் ரூ.548 கோடியில் 520 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார். 



மேலும் நிகழ்ச்சியில் பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று கொரோனா காலத்தில் இருந்து மீண்டு நிதி நெருக்கடிகளை தாண்டி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். முதலமைச்சரின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் சாமிநாதன் இந்த பொருட்காட்சியில் அரசின் துறை சார்ந்த திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இதனைக் கண்டு அரசு நலத்திட்டங்களை உரிய முறையில் அணுகி பயன்பெறுமாறும் கேட்டு கொண்டார். மேலும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்தும், அதனை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. 1978 முதல் 2024-ஆம் ஆண்டு வரை தற்போது 220 பொருட்காட்சிகள் நடைபெற்று உள்ளது. சேலம் அரசுப் பொருட்காட்சி 221- வது பொருட்காட்சியாகும். சேலத்தில் தான் அரசுப் பொருட்காட்சி முதன் முதலில் 06.08.1978-இல் தொடங்கப்பட்டு, இதுவரை சேலத்தில் 39 அரசுப் பொருட்காட்சிகள் நடைபெற்று உள்ளது. தற்போது நடைபெற இருப்பது 40-வது அரசுப் பொருட்காட்சி. எனது பொதுமக்கள் அரசு பொருட்காட்சியை பார்க்க வேண்டும் கேட்டுக் கொண்டார்.


தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 7,544 பயனாளிகளுக்கு ரூ.154.59 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.