சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது‌. அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் தடம் பதித்து உள்ளனர். ஆனாலும் இதுவரையில் இந்தப் பள்ளியில் ஆண்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது இல்லை. இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலமாக புதிதாக துவங்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவினரின் முயற்சியால் முதல்முறையாக ஆண்டு விழா ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாதேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்புரை நிகழ்த்தியதை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌரி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். 



பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் காடையாம்பட்டி வட்டார ஆசிரியர் பயிற்றுனர் காதர்செரிப், உதவி ஆசிரியர் வசந்தி, பள்ளியின் முன்னாள் மாணவரும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான ராஜ் குமார், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌரி சுதாகர் தலைமையில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகள் மூலமாக பெறப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கினர். சேலத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் முதல்முறையாக ஆண்டு விழா நடைபெற்ற நிகழ்வு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.



இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய முன்னாள் மாணவர்கள், "50 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த பள்ளி பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. தாங்கள் படிக்கும் காலத்தில் சரியான அறை கூட இல்லாமல் பள்ளி செயல்பட்டது. ஆனால் தற்போது மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசுக்கு உதவியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் அவரவர் பள்ளிக்கு நன்கொடை தந்து அரசு பள்ளியினை மேம்படுத்த வேண்டும். தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் அனைத்துவித வசதிகளையும் கொண்டு வர வேண்டும். மீண்டும் பள்ளியில் நண்பர்களை காண்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் பல இடங்களில் வெவ்வேறு விதமான வேலைகளில் உள்ளனர். ஆனால் பள்ளி ஆண்டு விழா என்று தெரிந்தவுடன் அனைவரும் தானாக பள்ளிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மட்டுமின்றி நாங்கள் படிக்கும் காலத்தில் பணி புரிந்த ஆசிரியர்கள் தற்போது வரைக்கும் இங்கு ஆசிரியராக உள்ளனர்.அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது பெருமையாக உள்ளது. இதேபோன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வினை அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.