சேலம் மாவட்டத்தில் குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்றும் தமிழகத்தின் குப்பைத் தொட்டியாக சேலம் மாநகராட்சி மாறுவதை அனுமதிக்க முடியாது எனவும் மேயர் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் திட்டத்திற்காக 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். சேலம் மாநகரத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஒன்று சேர்த்து குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டமாக இது செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாநகராட்சி கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

Continues below advertisement

மேலும், இதற்காக நிலம் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒதுக்க கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினர். ஆனால், சேலம் மாநகராட்சி மன்ற தீர்மானம் 35-ஐ ஏற்றுக்கொள்ளாத தமிழக அரசு குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து அதற்காக சேலம் மாநகராட்சி ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளதை கண்டித்தும் மாவட்ட ஆட்சியரை மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஐந்து மாவட்ட குப்பைகளை ஒரே இடத்தில் குவிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடையும் எனவும் தமிழகத்தின் குப்பைத் தொட்டியாக சேலம் மாறும் எனவும் அதற்கு அனுமதிக்க முடியாது என கண்டித்து மேயர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் புகார் மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், “மாமன்ற கூட்டத்தில் குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். சேலம் மாநகர பகுதியில் குப்பையில் இருந்து எரிசக்தி ஆலை உருவாக்கப்படுவதால் மாநகர மக்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படும். காற்று மாசுபடும் நிலை உள்ளது. சேலம் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கே இடமில்லாத சூழல் இருந்து வரும் நிலையில், ஐந்து மாவட்டங்களின் குப்பைகளை சேலத்துக்கு எடுத்து வந்தால் சேலம் குப்பை நகரமாக மாறிவிடும்” என்று கூறினார்.