சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று சேலம் மாநகராட்சியின் முதல் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் ராமச்சந்திரனுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, செங்கோல் என்பது ஆளும் கட்சி எதிர்க் கட்சி எதுவாக இருந்தாலும் சமமாக நின்று மாமன்றத்தில் விதிகளை காக்கப்பட்டு, மாமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணைமேயர் சாரதாதேவி, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அருள் ராமதாஸ், சதாசிவம் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். 



தொடர்ந்து திருக்குறளை வாசித்து ராமச்சந்திரன் முதல் கூட்டத்தில் தொடங்கி வைத்தார். கூட்டத்தின் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கவுன்சிலர்கள், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்த திமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 2000 முதல் 2500 வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம் சாட்டினர். மேலும் மக்களின் குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வு காணும் முதல் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் உள்ளது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாமன்ற உறுப்பினர்கள், ஜனநாயகப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் மக்களின் முதல் கோரிக்கை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை சாக்கடை உள்ளிட்ட அடிப்படைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மாநகராட்சியில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இளங்கோ கூறினார்.