சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர் பதவிக்காக 618 பேர் போட்டியிடுகின்றனர். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,19,361 பேர்.



1994-ஆம் ஆண்டு சேலம் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த சூடாமணி சேலம் மாநகராட்சியில் முதல் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு சூடாமணி வெற்றி பெற்றார். 2001 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் வெற்றி பெற்றார்.


அதன்பின் நடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி சேலம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவியேற்றார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் நேரடி மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதுவரை இரண்டு முறை திமுக மற்றும் அதிமுகவினர் மேயர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். 



சேலம் மாநகராட்சிக்கான 60 வார்டுகளில் 189 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 618 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் 7,19,361 வாக்காளர்களில் 4,70,155 (64.36%) பேர் வாக்களித்துள்ளனர். இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் எடப்பாடி மற்றும் நரசிங்கபுரம் என 6 நகராட்சிகளில் 165 பதிவிகளுக்காக 682 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2,25,775 வாக்காளர்களில் 1,74,877 (76.61%) பேர் வாக்களித்துள்ளனர். சங்ககிரி, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், பி.என்.பட்டி, மேச்சேரி, வீரக்கல் புதூர், கொளத்தூர், நங்கவள்ளி, வீரகனூர், கெங்கவல்லி, தெடாவூர், செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன் பாளையம், பேளூர், வாழப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர், ஆட்டையாம்பட்டி, அயோத்தியாபட்டணம், கன்னங்குறிச்சி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி, தேவூர், அரசிராமணி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் மற்றும் வனவாசி என 31 பேரூராட்சிகளில் 474 பதவிகளுக்கு 1906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3,90,894 வாக்காளர்களில் 3,09,319 (77.82%) பேர் வாக்களித்துள்ளனர். மொத்தமாக சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகளின் சதவீதம் 70.54 ஆகும்.



இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (22.02.2022) நடைபெற உள்ளது. சேலம் மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரு இடத்திலும், நகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணிக்கை 6 இடங்களிலும் மற்றும் பேரூராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணிக்கை 9 இடங்களிலும் நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



சேலம் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 2வது வார்டில் போட்டியிடும் முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், 15வது வார்டு போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உமாராணி, 26வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கலையமுதன், 28வது வார்டில் போட்டியிடும் ஜெயகுமார் மற்றும் 52வது வார்டில் போட்டியிடும் அசோகன் உள்ளிட்டோருக்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு மேயர் பதவி கொடுக்கப்படும் என திமுக வட்டாரம் பேசி வருகிறது. துணை மேயர் பதவிக்கு திமுக கூட்டணியில் உள்ள 36வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்.ஆர்.சுரேஷ் மற்றும் 7வது வார்டில் போட்டியிடும் சாரதா தேவி உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக சார்பில் போட்டியிடும் 21வது வார்டில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்தின் மகன் ஜனார்த்தனன், 34வது வார்டில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் மனைவி கோகிலா, 3வது வார்டில் போட்டியிடும் காட்சியின் மூத்த நிர்வாகி AKSM.பாலு மற்றும் 57-வது வார்டில் போட்டியிடும் சண்முகம் போன்றோருக்கு அதிமுகவின் மேயராக வேட்பாளராக முன்மொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது. துணை மேயர் பதவிக்கு 40வது வார்டில் போட்டியிடும் உமா ராஜ், 36வது வார்டில் போட்டியிடும் அம்மாபேட்டை கழக செயலாளர் யாதவ மூர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு உள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்