சேலம் மாநகரத்தின் நடுவே சேலம்-விருத்தாசலம் ரயில்வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடத்தில் தினந்தோறும் 6 பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன நகரின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்வதற்காக அணைமேடு என்ற இடத்தில் ரயில்வே கேட்டினை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேலத்தை கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களுடன் இணைக்க கூடியதாக அணைமேடு ரயில்வே கேட் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், ஆத்தூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களுக்குச் செல்ல அணைமேடு ரயில்வே கேட் வழியாகத்தான் செல்லவேண்டும். ரயில்கள் வரும்போது அணைமேடு ரயில்வே கேட் மூடப்படுவதால், இரண்டு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்று கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது அன்றாட வாடிக்கை நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், அவசர மருத்துவத் தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் என எந்த வாகனங்களும் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் சேலம் மாநகர மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, அணைமேடு பகுதியில் ரூ.92 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அணைமேடு மேம்பாலத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதன்மூலம் சேலம் மாநகர மக்களின் 40 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏரிகளை சீரமைக்க ரூ.180 கோடி ஒதுக்கியுள்ளார். சேலத்தில் 3 ஏரிகள் சீரமைக்கப்படுகிறது.ஊரக பகுதிகள் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வரப்படுகிறது. நகர்பகுதியிலும் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. தமிழகத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கூறி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் பேசி வருகின்றனர். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாக இருந்தாலும் பாலம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டு உள்ளோம். எதற்கெடுத்தாலும் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஒரே பாட்டை பாடிக்கொண்டு உள்ளார். அ.தி.மு.க.ஆட்சியை விட தற்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம், ஒழுங்கு குறித்து போலீசார் அதிகாரிகள் பலருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்" என்று கூறினார்.