தருமபுரியில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமதர்மன் வேடமடைந்த கிராமிய நாடக கலைஞர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களை எச்சரித்து, நூதன முறையில் விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி நான்கு ரோட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் கிராமிய நாடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கிராமிய நாடகக் கலைஞர்கள் எமதர்மன், சித்திரகுப்தர், தூதுவர்கள் வேடம் அணிந்து வந்து சாலை விதிகளை மதிக்காமல் வருபவர்களை பிடித்து சாலை விதிகள் குறித்து அறிகுறித்தனர். இதில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், மூன்று பேர் பயணம் செய்பவர்கள், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் பிடித்து வந்து, சாட்டை வைத்து பயமுறுத்தி, பூலோகத்தில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும், தலைக்கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் அபராதம் என்பது குறித்து தெரிவித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும், செல்போன்களில் பேசியபடி பயணிக்க கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, சிறு பிள்ளைகள் இடம் இரு சக்கர வாகனங்களை கொடுக்கக் கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை எடுத்துக் கூறி, எச்சரிக்கைகளை விடுத்தனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என உறுதி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினார். அதேபோல் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களையும், சீட் பெல்ட் அணிந்து வருபவர்களையும், கிராமிய நாடக கலைஞர்கள் கைக்குலுக்கி வாழ்த்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி 4 ரோட்டில் தொடங்கி, பென்னாகரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பம்பை மற்றும் மேலதிளங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகள் அடங்கிய, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னசாமி, ரகு, சதீஷ்குமார், உள்ளிட்ட காவல் துறையினர் போக்குவரத்து துறையினர், பம்பை, இசைக் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.