தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு இணைப்பு ரயில் சாலை திட்டம் 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையாததால்,  மொரப்பூர் ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தருமபுரி பாமக சார்பில் தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, தருமபுரி ரயில் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தலைமையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் 8 ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மத்திய அரசு அறிவித்து, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜிகே மணி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.