சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தீவட்டிபட்டி நச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து அதே பகுதியை சேர்ந்த சின்ன வீரன், சுருட்டையன், தங்கராசு பெரிய வீரன் ஆகியோர் அபகரித்து யூ ஆர் டி பட்டாவை தயார் செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழி இல்லாமல் கடந்த எட்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் செல்வராஜ் சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்க வந்தார். போலியாக தயாரிக்கப்பட்ட யூ ஆர் டி பட்டாவை ரத்து செய்து இலவச பட்டா வழங்க வலியுறுத்தி மனு வழங்கினார். சிஆர்பிஎப் சீருடையுடன் மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதேபோன்று, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தம்பம்பட்டி மண்மலை, பாலக்காடு பகுதியில் சேர்ந்த சிவகுமார். அவரது தாய், மனைவி தீபா மற்றும் அவரது மகன் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தலையில் ஊற்ற முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செந்தாரப்பட்டி அரசு பேருந்து பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வரும் சூரியன். அவர் கால்நடை துறையில் உதவியாளர் பணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி முதலில் ஏழு லட்சம் ரூபாய் அதன் பிறகு 8 லட்ச ரூபாய்க்கு நிலத்தையும் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தெரிவித்தார்.
ஆனால், வேலை குறித்து சூரியனிடம் கேட்டபோது, வேலை வாங்கி தரவும் முடியாது, பணமும் தர முடியாது என கூறி மிரட்டல் விடுத்து வந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கும் எடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பணத்தையும் தரவில்லை, வேலையும் வாங்கி தரவில்லை. இதனால் வாழ்வதைவிட இறப்பதே மேல் என நினைத்து இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும் நிலத்தையும் மீட்டி தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதுகுறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மற்றும் நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.