சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலங்களில் தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் இருப்பதாக கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கிறிஸ்தவ ஆலயங்கள், 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் அரசின் அனுமதிக்க காத்திருக்கிறது. இந்தப் பிரச்சினையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தலைமைச் செயலாளர் தலைமையில் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்க வேண்டும்,நிபந்தனைகள், வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்குவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஒரு செயல் நடைமுறை உருவாக்கப்பட்டு விரைவில் அரசாணை அறிவிக்கப்படும்" என்றார்.



தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று புதுமைப் பெண் திட்டம், அரசின் உதவிபெறும் சிறுபான்மை உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காலை உணவுதிட்டம் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் இருந்தது. தற்போது சிறுபான்மை மக்களுக்கான கல்வி நிறுவனங்களுக்கான நிரந்தர அங்கீகார சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மை கோரிக்கைகள் சரியாக கவனிக்காத காரணத்தால் ஏராளமான மனுக்கள் கிடப்பில் இருந்தது. இன்றைய கால சூழ்நிலையில் சிறுபான்மை மக்கள் மதிப்போடும் அன்போடும் வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சமூக வலைதளங்கள் மூலமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக தவறான சித்தரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதில் அளித்த சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினரை பெரும்பான்மையினருக்கு எதிரியாக கட்டமைக்க மிகப்பெரிய சதி நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியமான ஆளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி மதஉணர்வை தூண்டி வருகிறார். இதுபோன்ற பேச்சு தவிர்க்கப்பட வேண்டும் என்றார். இதுபோன்ற தவறுகள் உண்மையான தகவலாக என்று ஆராய்ந்து சமூக வலைதளங்களில் நீக்குவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பவர்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினார்.



இந்தியாவில் போதைப் பொருட்களால் இளைஞர்கள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று பிரதமர் பேசுவது அவர் பதவிக்கு நல்லதல்ல. போதைப்பொருள் அதிகம் பிடிபடுவது குஜராத் மாநிலத்தில் தான். பல்லாயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடம் தான் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மாநில அரசாங்கத்தின் மீது பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக எண்ணுகிறேன். போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு முழு அதிகாரம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தான் உள்ளது. அவர்களுக்கு தெரியாமல் இதுபோன்று எந்த சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை. விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் பிரதமர் கையில் தான் உள்ளது. இந்தியாவில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தி குறைக்க வேண்டிய முக்கிய பங்கு மத்திய அரசிடம் தான் உள்ளது எனவும் கூறினார். அரசியல் கட்சியில் உள்ள அனைவர்களும் புனிதராக இல்லை. தவறு செய்தவர்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது தான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.