சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (55), இவரது மனைவி யசோதா இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி யசோதாவை பிரிந்து கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும்போது வலசையூர் பகுதியில் 900 சதுர அடி நிலம் வாங்கி உள்ளனர். இதனிடையே சுப்பிரமணி கூலி தொழில் செய்து வரும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் ஒன்றாக இருக்கும்போது வாங்கி நிலத்தை பிரித்துக் கொடுக்கும்படி மனைவி யசோதாவிடம் கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுப்பிரமணி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.



உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பிறகு மண்ணெண்ணெய் ஊற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றி சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து சேலம் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், இதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சேலம் டவுன் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)