சேலத்தில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க வைக்கோல், தண்ணீருடன் வலம் வரும் ஆட்டோ. கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியை தரக் கூடிய சோளத்தட்டு வைக்கோலுடனும், தண்ணீருடனும் வலம் வரும் ஆட்டோ ஓட்டுநரின் முயற்சி காண்போரை கவர்ந்துள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு சுட்டெரிக்கும் வெயிலை கண்டு அஞ்சி எப்படி தப்பிப்பது என்ற சிந்தனைதான் அனைவரது மனதிலும் எழும். இதனால் சிலர் குடும்பத்துடன் கோடை வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கோடைக்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அனலாய் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக குடைபிடித்தும், தலையில் தொப்பி, துணி அணிந்தும் பிரச்சனைகள் தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். அதேபோல் தர்பூசணி, முழாம் பழங்கள், இளநீர் உள்ளிட்ட தற்காலிக குளிர்பாண கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சேலம் மாவட்டம் குரங்குசாவடி அடுத்துள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 72 வயதான சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் தாகத்தை தீர்க்கும் விதமாக சிறிய தண்ணீர் டேங்க் மற்றும் ஆட்டோவின் ஒரு பக்கத்தில் சிறிய டேப் அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், ஆட்டோ ஓட்டு போடுவதற்கு முன்பு, 40 ஆண்டுகள் டெய்லராக பணியாற்றி வந்தேன். ரெடிமேடு கடைகள் அதிகம் வரத்தொடங்கியதால் தையல் தொழில் பாதித்தது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறேன். எனது ஆட்டோவில் மக்களைக் கவரும் விதமாக பல்வேறு வசதிகளை செய்துள்ளேன். தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க தனது ஆட்டோ கூரை மீது வைக்கோல் கட்டி , தண்ணீருடன் பயணித்து வருவதாக கூறும் சுப்பிரமணி, போக்குவரத்து காவலர்கள், பயணிகள் உள்ளிட்ட காண்போர் அனைவரும் பாராட்டுவதாகவும், அவ்வாறு பாராட்டும் போது தனக்கு வயது குறைந்ததை போன்ற மன நிறைவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் குழந்தைகளைக் கவர்வதற்காக ஆட்டோவில் வண்ண வண்ண லைட்டுகளை அமைத்து, குழந்தைகளை கவர்ந்து பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தனக்கு முதியோர் உதவித் தொகை கிடைத்தால் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறுகிறார். சுட்டெரிக்கும் கோடை வெயில் சுப்பிரமணியன் ஆட்டோவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கை ஏசி சேலம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.