கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால்  சுட்டு  கொலை செய்த  சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. யானையை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்கின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி தெற்கு என இரு வனஉயிரின சரணாலயங்கள் உள்ளது. இந்த வனப்பகுதிக்கு ஆண்டுதோறும்  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்  கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வருவது வழக்கம். அதுபோல் கடந்தாண்டு வலசை வந்த 200 க்கும் மேற்பட்ட யானைகளை ஜவளகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர செய்தனர். அதில் 50 க்கும் மேற்பட்ட யானைகள், மீண்டும் திரும்பி செல்லாமல் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் ஜவளகிரி வனப்பகுதிகளில் நிரந்தரமாக தங்கி உள்ளது.  இந்த யானைகள் அவ்வப்போது தண்ணீர் தேடியும் உணவுக்காகவும் வருவது வழக்கம். அதனால் வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில்  பயிரிடப்பட்டுள்ள கரும்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய பயிர்களை  சேதப்படுத்தி வந்தது.  தற்போது கர்நாடக மாநிலம் பன்னர் கட்டாவிலிருந்து யானைகள் ஜவளகிரி வழியாக வலசை தொடங்கி உள்ளது.

 

இந்நிலையில்  ஜவளகிரி காப்புகாடு கக்கமல்லேஸ்வரம் கோயில் பகுதியில் நேற்று முன்தினம்  வனஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று பரிதாபமாக இறந்து கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வன அலுவலர்கள் இதனையடுத்து கால்நடை மருத்துவர் தன்னார்வு அமைப்பினர் முன்னிலையில்  இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது மர்ம நபர்கள் யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வனப்பாதுகாவலர் கார்த்திகேயன் உடனடியாக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்தனர். உடனே தனிப்படை அமைத்து யானையை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று  உத்திரவிட்டுள்ளார். அதன் பேரில்  வனத்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.