முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்த வெற்றி பயணம் திட்டத்தில், சேலம் கோட்டத்தில் 366 பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி என 7 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் இயக்கப்படும் 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகள் இயக்கப்படும். தினமும் 84.32 லட்சம் மகளிர் இலவசமாக பயணித்து பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி பயணம் திட்டத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் மாவட்டத்திற்கு ஏற்கப்படும் பஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரிக்கு இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம். அதே போல் சேலம் - ஈரோடு, சேலம் - நாமக்கல், சேலம் - மேட்டூர், சேலம் - கள்ளக்குறிச்சி, சேலம் - அரூர், சேலம் - ராசிபுரம், சேலம் - கரூர் ஆகிய பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டுமென்றால் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு செல்லலாம் அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் 1900 பேருந்துகள் மற்றும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்த மகளிர் வெற்றி பயணம் திட்டமும் இன்று முதல் அமலுக்கு வந்தது.
சேலம் உட்பட நான்கு மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர்கள் அமைச்சர்கள் வெற்றி பயணித்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தில் நான்கு மாவட்டங்களிலும் 366 சாதாரண கட்டண பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
