தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில்  விவசாயிகள் மல்லி, முல்லை, சாந்தி, பட்டன் ரோஸ், அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக  விவசாயம் செய்து வருகின்றனர்.  தருமபுரி பூக்கள் சந்தையில் இருந்து பெங்களுரு, சென்னை,  ஈரோடு, மற்றும் ஒசூா் பகுதிகளுக்கு மல்லிகை பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது  தருமபுரி மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், விவசாயிகள் மல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியதும் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பனி பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில்  மல்லிகை விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது.



 

தற்போது கோவில் திருவிழா, திருமண சுப நிகழ்வுகளால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் மல்லிகை பூ விலை அதிகரித்து கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது மீண்டும் அதிகரித்து கிலோ  800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் கடந்த ஒரு மாத காலமாக மல்லி பூ விலை குறையாமல், 600 முதல் 1000 வரை மாறி மாறி நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழச்சியடைந்துள்ளனர். ஆனால் கடந்தாண்டு டிசம்பர், ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், வரத்து குறைந்து கிலோ  1500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனயானது. இந்தாண்டு, தொடர் மழை பொழிவு இருந்ததால், பனி பொழிவு சற்று குறைவாக உள்ளது. இதனால் மல்லிகை பூ விளைச்சல் சராசரியாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 



பொங்கலுக்காக அறுவடைக்கு தயாராக உள்ள  செங்கரும்பு, சாகுபடி பரப்பு குறைவால் விலை அதிகரிக்கும் அபாயம்




 

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம்,  அரூர், பாப்பிரெட்டிபட்டி  உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொங்கலுக்காக செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்தாண்டு கரும்புக்கு லாபகரமான விலை கிடைத்ததால், இந்தாண்டு, பொங்கல் பண்டிக்கைக்காக விவசாயிகள் ஆர்வத்துடன், கருப்பு கரும்பை சாகுபடி செய்ய முற்படவில்லை. ஆனால்,  ஒரு சில விவசாயிகள் மட்டுமே கரும்பை சாகுபடி செய்தனர். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், ஏழு அடி உயரம் வரக்கூடிய கரும்பு போதிய வளர்ச்சி இல்லாமல், நான்கடி வரையே வளர்ந்துள்ளது. அதுவும் சரியான வளர்ச்சி இல்லை. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் செங்கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது.

 



 

தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் கருப்பு கரும்பு இல்லாததால்,  பொங்கலை எதிர்நோக்கி வியாபாரிகள் கரும்பை வாங்க முட்டி மோதுவதாலும், பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பின் விலை அதிகரிப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஆனால் கடந்த ஆண்டு  ஒரு கரும்பு, 30 ரூபாய்  முதல் 40 வரை விற்ற நிலையில், தற்போது விளைச்சல் குறைவால், ஒரு கரும்பின் விலை 50 முதல்  70  வரை விற்க வாய்ப்பு உள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் போதிய அளவில் செங்கரும்பு விளைச்சல் இல்லாததால், வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனால் செங்கரும்பின் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.