காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நீர்த்திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,25,000 கன அடியிலிருந்து 1,45,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் இரண்டும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் நீர் திறப்பு என்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

 



 

கடந்த ஒரு வார காலமாக தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 இலட்சம் முதல் 1,35,000 கன அடி வரை உயர்ந்தது. தொடர்ந்து மழை சற்று குறைந்ததால், நீர்வரத்து குறைந்து, நேற்று காலை வினாடிக்கு 1,25,000 கன அடியாக சரிந்து இருந்தது. இந்நிலையில் நேற்று  கர்நாடக அணைகளில் இருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கன அடியாக நீர்த்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து, காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,25,000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 1,45,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 



இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக, தொடர்ந்து 52-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடகு உள்ளிட்ட இடங்களில் அதிகனமாக  பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பும், நீர்வரத்தும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.