தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொன்னேரி ஊராட்சியில் பொன்னேரி, ஈட்டியம்பட்டி, முத்தானூர், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம ஊராட்சியில் 9 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாயத்து தலைவராக அழகு ராமன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் துணை தலைவராக அதே பகுதியைச் சார்ந்த விஜயா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதே போல் கிராமங்களுக்கு தேவையான குடிநீர், மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. இதில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறாமல் இருப்பதாக, உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றதாக தீர்மான எழுதப்பட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கையொப்பம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அரசு ஒதுக்கின்ற நிதிகள் குறித்த விவரங்களை ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதாக துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கு நிதியை பெறுவதற்கு துணை தலைவர் கையொப்பமிட மறுத்து வருகிறார். இதனால் ஊராட்சி மன்றத்தில் இருக்கின்ற வார்டு உறுப்பினர்களில் நான்கு பேர் ஊராட்சி மன்ற தலைவருக்கும், நான்கு பேர் துணை தலைவருக்கும் ஆதரவாக இருந்து வருகின்றனர். இதனால் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாததால், கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் கிராமங்களில் உயிரிழப்பவர்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை 30க்கும் மேற்பட்டோருக்கு வழங்காமல் நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டால், துணைத் தலைவர் கையொப்பமிட மறுப்பதாகவும், அதனால் நிதியை வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஊராட்சி மன்றத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு பணம் வழங்குவதற்கு தலைவர் அதிகப்படியான லஞ்சம் கேட்பதாக துணை தலைவரும் புகார் தெரிவித்து வருகிறார். இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார்களை தெரிவித்து வருவதாலும், சண்டையிட்டு கொள்வதாலும் கிராமத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொடமுடியாமல் இருந்து வருகிறது.
இதனை அடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கேட்காமல் நிதிகளை முறைகேடு செய்வதாகவும், ஊராட்சி மன்ற தலைவருக்கு நிதி குறித்து தகவல் தெரிவிக்கப்படாமல் இருப்பதாக கூறி, துணைத்தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரியின் அடிப்படையில் இன்று சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதேபோல் கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என கிராம மக்களும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத் தலைவரின் ஒத்துழைப்பு இல்லாததால், எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி, துணைத்தலைவரை மாற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மன்ற கூட்டம் சலசலப்புடன் முடிவு பெற்று பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் பொன்னேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.