சேலத்தில் அரசு நகர பேருந்தில் பயண சீட்டு கொடுக்கும் இயந்திரம் பழுதானதால் பயணிகளை பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. முறையான வழித்தடத்தில் பேருந்துகளை இயக்காமல் இருப்பது குறைவான பேருந்துகளை இயக்குவது போன்ற பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் அரசு நகரப் பேருந்தில் பயண சீட்டு வழங்கும் இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் பயணிகளை பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது.

 

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு போக்குவரத்து நகர பேருந்தில் நடத்துனர் பயன்படுத்திய இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் சேலம் நான்கு ரோடு பகுதியில் பேருந்தை நிறுத்திய நடத்துனர் சுமார் 10 நிமிடம் அதனை சரி செய்ய முயற்சி மேற்கொண்டார். ஆனால் இயந்திரம் பழுது ஏற்பட்டதால் நகர பேருந்தில் பயணம் செய்த பயணிகளை வழியிலேயே இறக்கிவிட்டு காலி பேருந்துடன் அங்கிருந்து சென்றனர்.

Also Read| கொலையாளிகள் சிக்கியது எப்படி? - திருத்தணி 15 வயது சிறுவன் கொன்று புதைத்த வழக்கின் பகீர் பின்னணி

நடுவழியில் இறக்கி விட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அரசு போக்குவரத்து கழக த்தின் இந்த அலட்சிய போக்கிற்கு பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இது போன்று அரசு போக்குவரத்து பேருந்துகளின் நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.