சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார், நிகழ்ச்சிக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக சேகோ உற்பத்தியாளர்களின் கண்காட்சியினை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உரையாடல் போது, சேகோ தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை உற்பத்தியாளர்கள் சரி செய்துகொள்ள வேண்டும்.


உற்பத்தியாளர் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இதுவரை செய்தது போல் இனியும் தவறு செய்ய முடியாது, நான்கைந்து வட மாநில மக்களுக்கு ஜவ்வரிசிதான் உணவாக உள்ளது என்றார். மக்களின் உணவில் நஞ்சு கலந்து கொடுப்பது தவறு. தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.



பின்னர் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், சேகோ கூட்டுறவு நிறுவனத்தில் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இக்கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலப்படத்தை கண்காணிக்க 9 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் தமிழக ஜவ்வரிசியில் கலப்படம் இருப்பதாக சிலர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 



சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசியை விற்பனை செய்வதால் மூட்டைக்கு 350 ரூபாய் வரை கூடுதலாக செலவாவதால் இதை குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதல்வரிடம் எடுத்து கூறி அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து மரவள்ளி கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்க சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்தால் அனைவருக்கும் நல்ல விலை கிடைக்கும். ரேஷன் கடைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், இந்த கூட்டத்தில் அரசு சார்பில் சேகோ நிறுவனம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.


பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பயனாளிகளிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்க ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள், சேகோ அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர்.