காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து வினாடிக்கு 21,000 கன அடியும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 78,000 கன அடி என தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,03,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளது. இதனால் நேற்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கும் 2 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 1,75,000 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் மேலும் மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,75,000 கனஅடியிலிருந்து குறைந்து, வினாடிக்கு 1,50,000 கன அடியாக சரிந்துள்ளது. ஆனாலும் 6-வது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகள் என எதுவும் தெரியாத அளவிற்கு வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் மழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு.
காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் நீர்வளத்துறை சந்திப் சக்சேனா இன்று ஒகேனக்கல்லிற்கு நேரில் வருகைதந்து ஒகேனக்கல் வெள்ள பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் இயல்பு நீரேற்று நிலையத்தினை ஆய்வு செய்தார். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரப்பெற்ற தண்ணீரின் வரத்து அளவுகள் குறித்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்து குறித்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நீர்வளத்துறை தருமபுரி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஈ.சங்கரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.