கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வினாடிக்கு 92,466 லிருந்து 64,997 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 92,000 கன அடியிலருந்து 80,000 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

 

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது.  இதனால் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 34,000 கன அடியும், கிருஸ்ணாராஜ சாகர் அணையிலிர்ந்து வினாடிக்கு 72,000 கன அடி என, இந்த இரண்டு அணைகளில் இருந்தும், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர், உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை குறைந்ததால், வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு வினாடிக்க 92,466 கன அடியிலிருந்து 64,997 கன அடியாக குறைக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,08,000 கன அடியாக இருந்தது. 

 




 

ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்ட பாறைகள் முழுவதும் மூழ்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பறந்து விரிந்து இரு கரைகளைத் தொட்டு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு சுமார் 92,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர் திறப்பு குறைப்பால், இன்று காலை நிலவரப்படி, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 80,000 கன அடியாக உள்ளது.

 

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும், கரையோர பகுதிகளில் நின்று புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 31,997 கன அடியாகவும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 33,000 கன அடி என, இரண்டு அணைகளிலிருந்தும் திறக்கப்படும் நீரின அளவு வினாடிக்கு 64,997 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.