சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். அவரது அண்ணன் விஜயன். இவர்களுக்கு அதே பகுதியில் பூர்வீக சொத்து 4.5 ஏக்கர் நிலமும் 9 தறி பட்டறை உள்ளது. விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கடந்த 2017 ஜூன் மாதம் 30 ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் சொத்து பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் குணசேகரன் உட்பட 5 பேர் இரும்பு ராடால் கோபாலை தாக்கி உள்ளார். அதில் பலத்த காயமடைந்த கோபால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார். 



இது குறித்து கோபாலின் மகன் கோகுல் ராஜ் மகுடஞ்சாவடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மகுடஞ்சாவடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு ஒருங்கிணைந்த சேலம் நீதிமன்றத்தில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட குருசாமி என்பவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜு, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 7,000 ரூபாய் அபராதம் விதித்து சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் கைதிகள் ஐந்து பேரும் கதறி அழுத சம்பவம் சேலம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் ஐந்து பேரும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.