சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி கேட் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


மக்கள் மனதில் வாழும் எம்ஜிஆர்


அப்போது அவர் பேசியது, "எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இயக்கத்தை அவருக்குப் பின் காத்து, தமிழகத்தில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. பொது மக்களையே வாரிசுகள் என நினைத்து இரண்டு தலைவர்களும் வாழ்ந்தனர். அவர்களின் சாதனைகளை எவராலும் முறியடிக்க முடியாத அளவிற்கு நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளனர். தன்னுடைய உயிர் உள்ளவரை நாட்டு மக்களுக்காக இருவரும் உழைத்தனர்.


எத்தனையோ தலைவர்கள் நாட்டை ஆள்கிறார்கள் மறைகிறார்கள். மறைவுக்கு பிறகு காற்றோடு காற்றாக மறைந்து விடுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரும் மறைந்த பின்னரும் நாட்டு மக்களின் மனதில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசியோடு அதிமுக இன்றைக்கு எழுச்சியோடு உள்ளது.


எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் அதிமுக முடிந்து விடும் என்றார்கள். ஆனால் அவருக்கு பின் ஜெயலலிதா 15 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். அவருடைய மறைவுக்கு பிறகு சில எட்டப்பர்கள் தீய சக்தி திமுகவோடு சேர்ந்து இந்த இயக்கத்துக்கு தீங்கு செய்தார்கள். 2016-ம் ஆண்டு ஜெயல்லிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரத்தத்தை வியர்வையாக சிந்தி ஆட்சியமைத்தார். அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்றைக்கு ஏதேதோ பேசுகிறார்கள். அதிமுக தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. நானும் ஒரு தொண்டனாய் இருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை பெற்று பொதுச்செயலாளராக உள்ளேன். சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக வர அதிமுகவில் மட்டுமே முடியும். அதேபோல சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் பதவிகளை பெற அதிமுகவில் தான் முடியும். வேறெந்த கட்சியிலாவது ஆக முடியுமா. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின் தலைவராக முதலமைச்சராக ஆகியுள்ளனர். இவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின்தான் வரமுடியும். திமுக ஒரு கார்பரேட் கம்பெனி அது கட்சி அல்ல. கட்சிக்குண்டான தகுதி அதிமுகவுக்குத்தான் உள்ளது. எந்த தொண்டன் உழைக்கிறாரோ அவருக்கு மரியாதை தரும் கட்சி அதிமுக மட்டும்தான். உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் அரசின் ஏதோ ஒரு பதவிக்கு வருகிறார்கள். திமுகவில் அப்படி யாரும் வர முடியுமா. வேறு யாரையாவது திமுக தலைவர் பதவிக்கு வர முடியும் என சொல்லக்கூடிய தில்லு திராணி திமுகவுக்கு உள்ளதா‌? இதுதான் திமுகவின் நிலைமை. சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு நடந்தது. தமிழகத்தில் வேறெங்கும் இடம் இல்லாமல் எடப்பாடியின் ஊரில் நடத்தினார்கள். சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை அந்த கோட்டையை பிடித்திட திமுக நடத்திய மாநாட்டை எல்லோரும் பார்த்தீர்கள். அந்த மாநாட்டின் மூலமாக நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. மதுரை அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பேருந்து கிடைக்காமல் வாகனம் கிடைக்காமல் கூட அவ்வளவு பேர் கலந்து கொண்டனர்.அந்த மாநாட்டைப் பார்த்து பொறாமை கொண்டு சேலத்தில் திமுக மாநாடு நடத்தியது. அதிமுக மாநாட்டினை அமைச்சர் உதயநிதி எவ்வளவோ விமர்சனம் செய்தார். அதிமுக மாநாட்டில் கொள்கை பிடிப்புள்ள பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் திமுக மாநாட்டில் ரிக்கார்டு டான்ஸ் மாறி ஆடினார்கள். இளைஞர்கள் மாநாடு அப்படித்தான் நடத்துவார்கள். மாநாட்டில் உதயநிதி பேசும் போது பல பேர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் பேசும் போது நீட் தேர்வு ரத்து செய்ய பல லட்சக்கணக்கான கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் காற்றில் பறந்து குப்பைத் தொட்டிக்கு போனது. இதுதான் நீட் தேர்வு ரத்து செய்யும் லட்சணம். இதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வி எழுப்பினார்.


 


அதிமுகவைப் பொறுத்தவரை எதை சொன்னாலும் செய்து காட்டுவோம். அந்த தில் திராணி அதிமுகவுக்கு உள்ளது. வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் பேசுகிறார். ஏன் உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்களே, கூட்டணி கட்சியுடன் சேர்த்து 38 பேர் இருந்தனரே. அவர்களை வைத்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைப்பதை விட்டு, எதையும் செய்யவில்லை. 5 ஆண்டுகளாக திமுக எம்.பிக்களால் எதுவும் நடக்கவில்லை. 5 வருடங்களை வீணடித்து விட்டனர். ஸ்டாலின் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை. அதை தவற விட்டதுதான் திராவிட மாடல் திமுக அரசு. அதிமுக ஆட்சியில் காவிரிப் பிரச்சினை வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி 22 நாட்கள் இந்திய அளவில் பேசும் அளவிற்கு நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். எங்களுக்கு அந்த தெம்பு திராணி இருந்த்து. அதிமுக ஆட்சிக்கு தைரியம் இருந்த்து. ஆனால் இன்றைக்கு திமுக பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினால் மக்களுக்கான பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப் படுகிறார். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சேலத்திற்கு வந்து பாருங்கள். 2011-க்கும் இப்போதைக்கும் வித்தியாசத்தை பாருங்கள். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்காலம் என பொதுமக்கள் பேசுகின்றனர்.10 ஆண்டுகளில் விலைவாசி உயரவில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை. சேலத்தில் 1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி, பூமிக்கடியில் மின்பாதை, பாதாள சாக்கடை திட்டம், 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக், சேலத்தில் மட்டும் 104 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் செய்யும் வகையில் அம்மா கிளினிக்-ஐ மூடியதுதான் திராவிட மாடல் திமுக அரசின் சாதனை. 500 படுக்கை வசதியுடன் மகப்பேறு மருத்துவமனை கொண்டு வந்தோம். பஸ்போர்ட் திட்டத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் திமுக ஆட்சியில் பணிகள் செய்யவில்லை. சேலம் திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் திட்டத்தினை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்ததுதான் திமுகவின் சாதனை. மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடங்கினோம். அடியோடு திமுக ஆட்சி முடக்கி விட்டது. திமுக 4 முறை அறிவித்த நிதிநிலை அறிக்கையில் 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் 2011-ல் ஜெயலலிதா பதவியேற்ற போது ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் இருந்தது. கடன் இருக்கும்போது பொறுப்பேற்றும் திறமையாக ஆட்சி நடத்தினோம். 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தோம். சேலத்தில் சட்டக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதையெல்லாம் திமுகவின் சாதனை என ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இந்தியாவின் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் கடன் வாங்குவதில்தான் உள்ளார். அந்த கடன் சுமை தமிழக மக்கள் மீதுதான் விழும். ஊழல் செய்வதில் நம்பர் 1 மாநிலம் தமிழகமாக உள்ளது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். நீதியரசரே முன்வந்து பல அமைச்சர்களின் மீது வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நிலை உள்ளது. முதலமைச்சராக இருக்கும் 4500 கோடி ஊழல் என என் மீது ஸ்டாலின் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றம் போய், வாதாடினோம். வழக்கு போட்டவரே திரும்ப பெறுவேன் என்றார். ஆனால் வழக்கை தொடர்ந்து நடத்தி நிரபராதி என நிரூபித்தோம். அந்த தில் திராணி உங்கள் அமைச்சர்களுக்கு ஏன் இல்லை. புதிய தலைமை செயலக வழக்கில் ஏன் வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள். அதிமுகவை முடக்க அழிக்க பொய் வழக்குகளை போட்டார்கள். அத்தனை வழக்குகளையும் முறியடித்துள்ளோம். திமுக ஆட்சியில் எந்தப் பிரச்சினை என்றாலும் ஒரு குழு போடுவார். அதோடு பிரச்சினை முடிந்துவிடும். இதுவரை 52 குழு போட்டுள்ளார். ஆனால் எந்த குழுவும் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கியதாக கூறி நிதி மேலாண்மைக்குழு அமைத்தார்கள். ஆனால் அந்த குழு அமைத்த பிறகு 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி வாங்கியுள்ளனர். 3 வருடமாக புதிய பஸ் வாங்குவதாக சொல்லி வருகின்றனர். ஆனால் இதுவரை வாங்கவில்லை. ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் புதிய பஸ் வாங்குவதாக சொல்லி இதுவரை வாங்கவில்லை. அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். திமுகவின் நிதி நிலை அறிக்கையில் ஆண்டுகள்தான் மாறி வருகின்றன. ஆனால் பேருந்துகள் வரவலில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் பணப்பலன் கிடைக்காமல் பாதிக்கிறார்கள். திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை. எல்லோரும் திமுகவில் ஐக்கியமாகி விட்டார்கள். எல்லா துறையிலும் காலிப் பணியிடம் நிரப்பப்படவில்லை. மருத்துவத்துறையில் மட்டும் 35 ஆயிரம் பணியிடங்களை அதிமுகவில் நிரப்பினோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதாக அரசு ஊழியர்களின் வாக்குகளை பெற்ற திமுக அப்படியே நாமம் போட்டு விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. திமுக கட்சியைச் சேர்ந்தவரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுகவினர் போதைப் பொருள்களை விற்பதால்தான் அதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.


 


காவிரிப் பிரச்சினையில் அதிமுக அரசு நல்ல தீர்வு கண்டது. ஆனால் திமுக அரசு வந்தபிறகு காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பொருள் கொண்டு வந்தபோது அதனை தமிழக அதிகாரிகள் நிராகரிக்கவில்லை. வாக்கெடுப்பு நடத்தி கர்நாடக அரசு மேகதாது அணைக்கு ஆதரவை பெற்றுவிட்டது. மேகதாது அணை நீர்வளத்துறை ஆணையம் அனுப்பிவிட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். 20 மாவட்டங்களுக்கு குடிநீர் பாதிக்கப்படும். திமுக அரசின் மெத்தனப்போக்கால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகாவது உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற வேண்டும். திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் வாக்களித்தனர். 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. 99 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, காவிரி குண்டாறு இணைப்புதிட்டத்திற்கு நிதி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு முதல் கையெழுத்தில் ரத்து, மாதந்தோறும் மின் கட்டணம், நியாயவிலைக் கடைகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை, தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்ததுதான் திமுகவின் சாதனை. துப்புரவு பணியாளர்களுக்கு வார விடுமுறை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்துவது, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்படும், எரிவாயு சிலண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நசிந்து விட்டது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். விசைத்தறிக்கு மின் கட்டணம் உயர்த்தி விட்டனர். வீட்டு வரி 100 சதவீதம் உயர்வு, கடை வரி 120 சதவீதம் உயர்வு, மின்கட்டணம் 52 சதவீதம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, குப்பைக்கும் வரி போட்டுவிட்டார்கள். வரி மேல் வரி போட்டு விட்டு வரியில்லா பட்ஜெட் என்கிறார்கள். விலைவாசி 40 சதவீதம் உயர்ந்து விட்டது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். தமிழகம் அதிக கடன் வாங்கி வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டனர். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சி முடிவதற்குள் 10 லட்சம் கோடியாக கடன் உயர்ந்து விடும். இதையெல்லாம் மக்கள்தான் ஏற்க வேண்டும். கடன் சுமை மக்களின் தலையில் விழும். பல வகையில் வருவாய் அதிகரித்தும் கடன் அதிகமாக நிர்வாக திறமையில்லாதுதான் காரணம். தமிழகத்தின் பிரச்சினையை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைப்பார்கள். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16,419 கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினர். மக்களின் பிரச்சினைகளை அவர்கள் கேள்விகளாக எழுப்பினர். ஆனால் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் 9695 கேள்விகள் கேட்டுள்ளனர். அதிமுகவை விட 7 ஆயிரம் கேள்விகள் குறைவாக கேட்டுள்ளனர். இதன் மூலம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்திறனை சீர்தூக்கி பார்க்கலாம்.திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவது கொள்ளையடிப்பதற்காகத்தான். கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுகதான். மீண்டும் திமுகவுக்கு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தால் ஊழல்தான் செய்வார்கள்.  அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது தமிழகத்தின் உரிமைகளை மீட்போம். தமிழ்நாடு காப்போம். இந்தியாவின் தமிழகம் முதன்மை மாநிலம் என்பதை மீண்டும் கொண்டு வருவோம்" என்று கூறினார்.