சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ்யின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாம் வகையிலும் தேர்தலுக்கான ஆக்கபூர்வமான பணிகளை செயல்படுத்தி வருகிறது என்றார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. யார் விருப்பப்பட்டாலும் ராமர் கோயிலுக்கு செல்லலாம். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன், உடல்நலம் பாதிப்பு இருப்பதால் அதை பொறுத்து தான் முடிவு செய்வேன் என்றும் கூறினார்.
பெரியார் பல்கலைக்கழக விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார். அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு நடைபெறவில்லை. தலைமை கழகம் முறைப்படி யாரெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அதிமுக அறிவிப்புக்கு பிறகு முறையாக விண்ணப்பித்தால் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அவர்களுக்கு வாய்ப்பே தருவார்கள். சென்னையில் மழைபாதிப்பு இருந்தது, பெரிதளவுகாற்று ஏற்படவில்லை. இதனால் மரங்களும் சாயவில்லை. கனமழையால் தண்ணீர் அங்கங்கே தேங்கி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். சென்னை மாநகரில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி முழுமையாக ஏற்படுத்தி உள்ளதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மழை பாதிப்பால் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்படி நிலைமை இருக்க திமுக அரசாங்கம் பொய்யான செய்தியை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக அரசு தவறான செய்திகளை வெளியிட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் கடுமையான மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அப்படி இருந்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைவான நடவடிக்கை எடுத்து இருந்தால், மக்கள் கோபத்திற்கு ஆளாகி இருந்திருக்கமாட்டார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் டெல்லி நடைபெறும் இந்திய கூட்டணி மாநாட்டில் சென்று கலந்துகொண்டார். இதை பார்க்கும்போது ஆட்சி அதிகாரம் தான் தேவைப்படுகிறது. ஓட்டுபோட்டு தேர்வு செய்த மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கமாக உள்ளது என்றார். இதை தொடர்ந்து அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தபிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாவது நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதையும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது. பல்வேறு வலியுறுத்தலின் அடிப்படையில் அனைவரும் பணிக்கு திரும்பி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்கள் மீது எந்தவித அக்கறையும் செலுத்த தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும் குற்றம்சாட்டினார். தமிழக போக்குவரத்து துறையில் 22,000 பேருந்துகள் உள்ளது. ஆனால் 16,000 பேருந்துகள் இயங்குகிறது. 5000 பேருந்துகள் பழுதடைந்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 3456 பேருந்துகளில் 2500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 850 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து மானிய கோரிக்கை வரும்போது 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சார பேருந்துகள் இதுவரை வரவில்லை. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிஎஸ் 6 என்ற டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்வதாக கொள்கை விளக்க குறிப்பில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு பேருந்துகள் கூட வாங்கவில்லை
இதுதான் திமுக ஆட்சியின் அவலம் எங்கு பார்த்தாலும் பழுதடைந்த பேருந்துகள் தான் இயங்கி வருகிறது. போக்குவரத்துறையில் நிர்வாக திறன் இல்லாத அரசாக செயல்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து மகளிரும் கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிர் பயணிக்கும் சூழல் உள்ளது. தேர்தல் வாக்குறுதில் சொல்வது ஒன்று, செயல்படுவது வேறு. இரட்டைவேடம் போடுவது அரசு தான் திமுக அரசாங்கம். மகளிர்களுக்கு இயக்கும் பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்படுகிறது என்றார்.
மேலும் முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போட்ட எந்தெந்த தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவங்கி உள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேள்வி எழுப்பிருந்தேன். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் 3 லட்சத்து 5ஆயிரம் கோடி தொழிலை ஈர்த்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூட திமுக அரசாங்கத்தில் நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது விளம்பரத்திற்காக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதாக மக்கள் மத்தியில் எண்ணம் எழுகிறது. குறிப்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
திமுக அரசாங்கம் அமைந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய பிறகு மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மக்கள் என்னென்ன தொழிற்சாலைகள் வந்துள்ளது, எவ்வளவு வந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியவரும் ஆனால் இதுவரை வெளியிடவில்லை கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,500 அறிவித்தோம். ஆனால் இந்தாண்டு திமுக ஆட்சியில் பொங்கல்பரிசு தொகை மட்டுமே அறிவித்தார்கள். பரிசு பணம் குறித்து வலியுறுத்தி, அதிமுக அறிக்கை வெளியிட்ட பிறகு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை திமுகஅரசு பொங்கல் பரிசு தொகையில் அறிவித்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசுத் தொகையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.