தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 25,000 கன அடியாக குறைந்தது.

 

தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,000 கன அடியாக நீர்திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 25,000 கன அடியிலிருந்து 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

 

இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதை,  மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் நீர்திற்ப்பு அதிகரிப்பு மற்றும் தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால்,  நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் வள அணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.



 

பாலக்கோடு அருகே ரயில்வே மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரால், 2 கிமீ  சுற்றி செல்லும் கிராமமக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி ஊராட்சியில் பொதுப்பணிதுறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது குப்பன் கொட்டாய் பாசன பிரிவு கால்வாய் மூலம் புங்குட்டை ஏரி, மன்னார் குட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி கடந்த 10 நாட்களாக உபரி நீரானது தளவாய்ஹள்ளி, புதூர்,ரெட்டியூர், மூங்கப்பட்டி வழியாக ஏரிகளுக்கு செல்கிறது.



 

 

இப்பகுதியில் மழை காலம் மற்றும் ஏரி நிரம்பும் போது தண்ணீர் வெளியே செல்வதற்கு இடையூராக நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டி கிடைக்கிறது. இந்த உபரிநீர் பேளாரஹள்ளி ஊராட்சியில் உள்ள தாமரை ஏரி வரை செல்வதால் இடைப்பட்ட சுமார் 2 கிமீ தூரத்திற்கு நீர் வழிகால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், உபரி நீர் வெளியேற முடியாமல் மூங்கப்பட்டி, ரெட்டியூர் கிராமங்களுக்கு செல்லும் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உபரிநீர் சூழ்ந்துள்ளது. இதனால் கிராம மக்கள் 2 கி.மீ சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ரயில்வே சுரங்க பாதையில் உள்ள நீரை அகற்ற வேண்டும் என  கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.