கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது கர்நாடகா மற்றும் தமிழக வழியாக சென்று கடலில் கலக்கும். இதில் கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் வழியாக சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லும் காவிரி ஆறு செல்கிறது. ஆனால் பருவமழை வரும்போது நீர் தேக்கத்திற்கு வழியில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். 



மேட்டூர் அணை உருவான வரலாறு:


இதனை கருத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு நீர் தேக்கத்திற்காக மேட்டூர் அணை கட்டுவதற்கு 1925 ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் அணை கட்ட தொடங்கினர். அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்தது. மேட்டூர் அணை கட்டுவதற்கான செலவு தொகை ரூபாய் 4 கோடியே 80 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கர்ணலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் முதன் முறையாக திறந்து வைத்தார்.



சவாலாக இருந்த பெருவெள்ளம்:


பெருவெள்ளக்காலங்களில் காவிரியால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்திட சேலம் மாவட்டம் மேட்டூரில் பாலமலைக்கும், சீதாமலைக்கும் இடையே கட்டப்பட்டது ஸ்டான்லி நீர்த்தேக்கம் 1934 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணை அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய அணை என்ற பெருமைக்குரியது. கட்டுமானப்பணியின் போதே இரண்டுமுறை காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் அணை கட்டுவதற்கு பெரும் சவாலாக இருந்தது. அப்போது காவிரியின் பயணத்தை தற்காலிகமாக மாற்றிட உருவாக்கப்பட்ட பாதையே தற்போது 16 கண் மதகுகளாய் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. முதலில் 10 மதகுகளோடு கட்டப்பட்ட இந்த பாலம் பெருவெள்ள காலத்தை கருத்தில் கொண்டு 16 மதகுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது.



எல்லீஸ் 16 கண் மதகுகள்:


உபரி நீர் வெளியேற்றும் வருவதற்கு மட்டுமின்றி அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 120 அடியில் கடைசி 20 அடிகள் இந்த மதகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஷட்டர்கள் மூலமாகவே தேக்கி வைக்கப்படுகிறது. அணை முழு கொள்ளவை எட்டும் காலங்களிலெல்லாம் அணையை காத்திடும் பெரும் பங்கு இந்த 16 கண் பாலத்திற்கே உண்டானது. இந்த மதகுகளின் வழியாக அதிகப்பட்சமாக வினாடிக்கு 5 லட்சம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றலாம்.


அணை கட்டிமுடிக்கப்பட்ட பிறகு 1961 ஆம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கன அடிவரையிலும், 2005 ஆம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் கன அடி 2018 ஆம் ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை சிறப்பாக வடிவமைத்த பொறியாளர் கர்னல் எல்லீஸ் பெயரில் 16 கண் பாலம் அழைக்கப்படுகிறது. 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை 90 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சியளிப்பதற்கு முக்கிய காரணமாக 16 கண் பாலம் விளங்கி வருகிறது.