தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தருமபுரி புறநகர மற்றும் நகர பேருந்து நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்திருந்தது. அதனடிப்படையில் வெளியூர்களில் பணிபுரியும் பொது மக்கள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் விடுமுறை நாட்கள் முடிந்து இன்று சொந்த ஊர்களுக்கு மற்றும் பணிபுரியும் பகுதிகளுக்கு செல்ல தருமபுரி புறநகர பேருந்து மற்றும் நகர பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் குவிந்தனர்.
தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திருச்சி, நாமக்கல் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல நகரப் பேருந்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இருந்த போதிலும் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் அதிக அளவு இல்லாததால் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நகரப் பேருந்து நிலையத்தில் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கிடக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி புறநகர மற்றும் நகர இரண்டு பேருந்து நிலையத்திலும் சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் உட்பட மாவட்டத்தில் சுமார் 100 க்கும் மெற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் கோட்டத்தில் மட்டும் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களும் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.