தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி  பகுதியில் உள்ள 1,2,3, 8,10 ஆகிய 5 வார்டுகளில்

சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள்  குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து 5 வார்டுகளுக்கு வண்டிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.



 

ஆனால் இந்த தண்ணீர் இந்த பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குடிநீர் சுத்தம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மீண்டும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் இதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முறையான தண்ணீர்  வழங்க கோரி பாலக்கோடு - பெல்ரம்பட்டி சாலையில், காலி குடங்களுடன் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து வந்த பாலக்கோடு காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து, 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



 

தருமபுரி அருகே நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில்  சிமெண்ட் மூட்டைகள் சரிந்தது. 

 



 

தருமபுரி மாவட்டம் சவுளூர் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்றிருந்தது. நேற்றிரவு ஆந்திராவிலிருந்து, கேரளா செல்ல 37 டன் எடையுள்ள 749 சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி வந்துள்ளது.  அப்பொழுது தேசிய நெடுஞ்சாலையில், சவுளூர் ரயில்வே மேம்பாலம் அருகே லாரி வந்த பொழுது, திடீரென இடது புறமாக ஒரு லாரி, சிமெண்ட் லாரியை முந்தி செல்ல முயன்றதில்,  சிமெண்ட் லாரியை இடித்துவிட்டு சென்றுள்ளது.

 

அப்பொழுது சிமெண்ட் லாரி, மேம்பால பக்கவாட்டு சுவரின் மீது ஏறி சாலையில் கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக லாரி 30 அடி உயரத்திலிருந்து கீழே விழாமல் நூலிழையில் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரி சாலையில் கவிழ்ந்ததில்,  சிமெண்ட் மூட்டைகள் முழுவதும் சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் போக்குவரத்தை மாற்றி, ஒரு வழிப்பாதையாக திருப்பி விட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து வேறு சிறிய ரக வாகனங்களை கொண்டு சாலையில் சிதறி கிடந்த சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சாலை விபத்தில் சிமெண்ட் லாரி ஓட்டுநர் சலீம் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினார். மேலும் சிமெண்ட லாரியை இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற, லாரி குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.